search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக சட்டசபை தேர்தல்"

    • கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இல்லை.
    • காங்கிரஸ் கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    பெலகாவி :

    கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிகோளி பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால், காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். குமாரசாமி எங்கள் கட்சிக்கு ஆதரவு தருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடகத்தில் கடந்த 2004 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் இரு முறையும் கூட்டணி ஆட்சி பாதியிலேயே கலைந்துபோனது குறிப்பிடத்தக்கது.

    • மக்களின் ஆதரவு இருக்கும் வரை ஒருவர் அரசியலில் தொடர்ந்து இருக்கலாம்.
    • பா.ஜனதா ஆட்சியில் நான் மந்திரி பதவி வேண்டாம் என்று கூறினேன்.

    பெங்களூரு

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்து தார்வார்-உப்பள்ளி மத்திய தொகுதியில் போட்டியிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிட பா.ஜனதா வாய்ப்பளிக்காததால் அவர் காங்கிரசில் சேர்ந்திருந்தார். 6 முறை எம்.எல்.ஏ. ஆக இருந்ததாலும், வயதாகி விட்டதாலும், தேர்தல் அரசியலில் இருந்து ஜெகதீஷ் ஷெட்டரை ஓய்வு பெறும்படி பா.ஜனதா தலைவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இதுபோன்ற காரணங்களால் தான் அவர் பா.ஜனதாவில் இருந்து விலகினார். இந்த விவகாரம் குறித்து உப்பள்ளியில் ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களின் ஆதரவு இருக்கும் வரை ஒருவர் அரசியலில் தொடர்ந்து இருக்கலாம். மக்களின் ஆசீர்வாதம் இருக்கும் போது அரசியலில் தொடர்ந்து இருப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. பா.ஜனதா ஆட்சியில் நான் மந்திரி பதவி வேண்டாம் என்று கூறினேன். இது எனது அரசியல் அனுபவம், முதிர்ச்சிக்காக எடுத்த முடிவாகும்.

    இடஒதுக்கீடு விவகாரத்தில் மக்களிடம் பொய் சொன்ன ஒரே முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆவார். என்னை அரசியலில் இருந்து ஓய்வு பெற பா.ஜனதா தலைவர்கள் கூறினார்கள். பிரதமர் மோடி 4 முறை முதல்-மந்திரியாகவும், 2 முறை பிரதமராகவும் இருந்துள்ளார். அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா?. பிரகலாத் ஜோஷி 4 முறை எம்.பி.யாகவும், மத்திய மந்திரியாகவும் இருந்துள்ளதால், அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதி.
    • முதல்-மந்திரி விவகாரத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது.

    பெங்களூரு :

    பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் 2 மணிநேரத்திற்கும் மேலாக முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதி. பெரும்பாலான கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்றே கூறி உள்ளது. தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

    நாளை (இன்று) ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் வெளியான பின்பு, அதுபற்றி எங்கள் தலைவர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள். துமகூரு மாவட்டத்திலும், கொரட்டகெரே தொகுதிகளிலும் காங்கிரசின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காங்கிரசில் முதல்-மந்திரி யார்? என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.

    அதற்கு முன்பாக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடத்தி முதல்-மந்திரி யார்? என்பது குறித்து தீர்மானிக்கப்படும். கட்சி மேலிடம் எனக்கு முதல்-மந்திரி பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா? என நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். காங்கிரஸ் மேலிடம் எனக்கு முதல்-மந்திரி பதவி வழங்கினால் ஏற்றுக் கொள்வேன்.

    கட்சி தலைமை கூறிய பின்பு முதல்-மந்திரி பதவி வேண்டாம் என்று சொல்ல முடியுமா?. முதல்-மந்திரி விவகாரத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனது நண்பர்கள் மூலம் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு தூது விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் கூட்டணி ஆட்சி அமைக்க அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு போல் கூட்டணி ஆட்சி அமையலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதனால் தற்போதே பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணிக்காக ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் தேவேகவுடா, குமாரசாமியுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தேர்தல் பிரசாரத்தின் போதே தேவேகவுடா, பா.ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி தொடர்பாக தன்னுடன் பேசியதாக கூறியிருந்தார். இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என கூறுகிறது. இதனால் காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் கூட்டணி ஆட்சி அமைக்க அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால், சுயேச்சைகள், மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி நடத்தவும், இது முடியாவிட்டால் ஜனதாதளம் (எஸ்) கட்சி துணையுடன் கூட்டணி அமைக்க இரு கட்சிகளும் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றன. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர்களும், பா.ஜனதா தலைவர்களும் தனித்தனியாக கூடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதுபோல் சுயேச்சைகள், மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளன.

    இந்த நிலையில், ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும், கூட்டணிக்கு எந்த கட்சி சம்மதம் தெரிவித்தாலும் எங்களின் கோரிக்கைகள், நிபந்தனைகளை உடன்படுபவர்களுடன் கூட்டணி அமைப்போம் என்றும் தனது நண்பர்கள் மூலம் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு தூது விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதாவது முதல்-மந்திரி பதவியுடன், நீர்ப்பாசனம், பொதுப்பணித்துறை, எரிசக்தி துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும். கூட்டணி ஆட்சியில் எந்த கட்சி மேலிடமும், தலைவர்களும் தலையிடக் கூடாது. கூட்டணி ஆட்சியில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கக் கூடாது. எந்த கொள்கை முடிவையும் எடுக்க தடை இருக்க கூடாது. ஜனதாதளம் (எஸ்) கட்சி கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை எந்த எதிர்ப்பும் இன்றி நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும்.

    ஜனதாதளம் (எஸ்) கட்சியின் வாக்கு வங்கிகள் அதிகமுள்ள பழைய மைசூரு பகுதிகளில் கூட்டணி கட்சியினர் தலையிடக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை குமாரசாமி விதித்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் குமாரசாமி கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இன்று (சனிக்கிழமை) நடைபெறும் தேர்தல் முடிவை பொறுத்தே 3 கட்சிகளும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நோக்கி நகரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஓட்டுப்பதிவு நடந்த 10-ந்தேதி நள்ளிரவே குமாரசாமி சிங்கப்பூர் சென்றுள்ளார். அவர் இன்று காலை பெங்களூருவுக்கு திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது.
    • ஆட்சியை கைப்பற்ற போவது யார் என்பது மதியத்திற்குள் தெரிந்து விடும்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ம் தேதி தேர்தல் நடைபெற்றிருந்தது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பா.ஜ.க. சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக 184 பெண்களும், ஒரு திருநங்கையும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர்.

    கடந்த 10-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்ககளும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட உள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற உள்ளது.

    பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 4 இடங்களும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 34 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குவதால், மதியம் 2 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி விடும்.

    • ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ‘கிங் மேக்கர்' ஆகும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.
    • ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு மீது திரும்பியுள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதில் 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை (சனிக்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. சில நிறுவனங்களின் கருத்து கணிப்பில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றும், தொங்கு சட்டசபை தான் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

    இத்தகைய சூழ்நிலையில் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 'கிங் மேக்கர்' ஆகும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. அதாவது ஜனதா தளம் (எஸ்) கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கிறதோ அந்த கட்சியே ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்படும். அதனால் கர்நாடகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு மீது திரும்பியுள்ளது.

    இந்த நிலையில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி தேர்தல் முடிவடைந்ததும் நேற்று முன்தினம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அவர் கடந்த 6 மாதங்களாக ஓய்வின்றி தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், பெங்களூருவில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். நாளை (சனிக்கிழமை) ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இதற்கிடையே குமாரசாமி சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

    குமாரசாமிக்கு 2 முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவருடன் தனது தனி உதவியாளர் மற்றும் சில நண்பர்களுடன் குமாரசாமி சிங்கப்பூர் சென்று இருப்பதாகவும், அங்கு இன்று ஓய்வு எடுத்துவிட்டு நாளை (சனிக்கிழமை) காலை பெங்களூரு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் குமாரசாமி ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

    • 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்காக ரூ.394 கோடி செலவு செய்யப்பட்டு இருந்தது.
    • ஒரு தொகுதிக்கு ரூ.1¾ கோடி செலவாகி இருந்தது.

    பெங்களூரு :

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்திருந்தது. இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதுடன், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்வதற்காக பஸ்கள் என பல்வேறு வேலைகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது.

    இந்த நிலையில், 224 தொகுதிகளிலும் சட்டசபை தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் சுமார் ரூ.440 கோடியை செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரு தொகுதிக்கு மட்டும் ரூ.1.96 கோடியை தேர்தல் ஆணையம் செலவு செய்திருக்கிறது.

    கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்காக ரூ.394 கோடி செலவு செய்யப்பட்டு இருந்தது. ஒரு தொகுதிக்கு ரூ.1¾ கோடி செலவாகி இருந்தது. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது வாக்குச்சாவடி அமைத்தல், ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ.160 கோடியை தேர்தல் ஆணையம் செலவு செய்திருந்தது. ஒரு தொகுதிக்கு மட்டும் ரூ.75 லட்சம் செலவு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த தேர்தலில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், தற்போது ரூ.440 கோடி செலவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலுக்கான செலவை கர்நாடக அரசு தான் தேர்தல் ஆணையத்திடம் வழங்கி இருந்தது. அந்த பணத்தை தான் தேர்தல் ஆணையம் சட்டசபை தேர்தலுக்காக செலவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நாங்கள் இங்கு விளையாட வந்துள்ளோம்.
    • கடந்த முறை கூட்டணி ஆட்சி வந்தது.

    பெங்களூரு :

    வருவாய்த்துறை மந்திரியும், பத்மநாபநகர், கனகபுரா தொகுதிகளின் பா.ஜனதா வேட்பாளருமான ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சில கருத்து கணிப்புகள், பா.ஜனதா அறுதி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என்று கூறியுள்ளன. இந்த முறை பா.ஜனதா ஆட்சி அமைவது உறுதி.

    ஒருவேளை தொங்கு சட்டசபை அதாவது இடங்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், அந்த அரசியல் ஆட்டம் ஆடி வெற்றி பெறுவோம். நாங்கள் இங்கு விளையாட வந்துள்ளோம். கடந்த முறை கூட்டணி ஆட்சி வந்தது. பின்னர் அந்த ஆட்சி கவிழ்ந்தது.

    கடந்த 4 ஆண்டுகளாக நிலையான ஆட்சி நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்தினோம். தேர்தல் முடிவு வந்த பிறகு கட்சி மேலிட தலைவர்கள் உத்தரவுப்படி நாங்கள் நடந்து கொள்வோம்.

    ஒருவேளை பெரும்பான்மை கிடைக்காமல், பெரிய கட்சியாக உருவெடுத்தால், நாங்களே ஆட்சி அமைப்போம். பா.ஜனதா வெற்றி பெற்றால் முதல்-மந்திரி யார் என்பதை எங்கள் கட்சி மேலிடம் முடிவு எடுக்கும்.

    இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

    • கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது.
    • கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு இதற்கு முன்பு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.

    அதில் பா.ஜனதா 104 இடங்களிலும், காங்கிரஸ் 80 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) 37 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் இறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கர்நாடக அரசியலில் நிலையற்ற தன்மை உண்டானது.

    காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கைகோர்த்து கூட்டணி ஆட்சி அமைத்தன. ஆனால் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தார். அதன்படி எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாததால், 6 நாட்களில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

    14 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஆபரேஷன் தாமரையால் 17 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியதால், குமாரசாமியின் ஆட்சி கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர் பதவியை ராஜினாமா செய்ததால், பசவராஜ் பொம்மை முதல்-மந்திரி பதவியில் அமர்ந்தார். இந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிவடைந்துள்ள கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    கடந்த சட்டசபை தேர்தல் முடிவு போலவே இந்த முறையும் தேர்தல் முடிவுகள் அமையும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அதாவது தொங்கு சட்டசபை அமையும் என்று அதில் சொல்லப்பட்டுள்ளது. அத்தகைய முடிவு வந்தால், கர்நாடகத்தில் மீண்டும் ஒரு முறை அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படும் நிலை உருவாகும். இந்த தெளிவற்ற கருத்து கணிப்புகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'சட்டசபை தேர்தல் கருத்து கணிப்புகள், காங்கிரசுக்கு ஆதரவாக இல்லை. பா.ஜனதாவுக்கு ஆதரவாக கணிப்புகள் உள்ளன. எங்கள் கட்சி தொண்டர்கள் வழங்கியுள்ள தகவலின்படி, நாங்கள் சொந்த பலத்தில் ஆட்சி அமைப்பது உறுதி. இதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று இது உங்களுக்கு தெரியும்' என்றார்.

    முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறும்போது, 'நாங்கள் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் கணக்கு போட்டுள்ளோம். மாநிலம் முழுவதும் தொண்டர்களிடம் பேசியுள்ளேன். அதனால் எங்கள் கட்சிக்கு குறைந்தது 115 இடங்கள் கிடைக்கும். நாங்கள் சொந்த பலத்தில் ஆட்சி அமைப்போம். இதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை' என்றார்.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள், 'நிச்சயம் காங்கிரஸ் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும்' என்று தெரிவித்தனர். இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறும்போது, 'யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நான் ஏற்கனவே கூறியபடி காங்கிரஸ் கட்சி 141 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பே இல்லை. நாங்கள் ஆட்சி அமைக்க போகிறோம்' என்றார்.

    எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறும்போது, 'தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறியுள்ளன. ஒரு நிறுவனம், காங்கிரஸ் 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளது. நான் சொல்கிறேன், எங்கள் கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெற்று சொந்த பலத்தில் ஆட்சி அமைக்கும். இதில் எனக்கு சந்தேகம் இல்லை' என்றார்.

    இப்படி இரு கட்சிகளின் தலைவர்களும், தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று உறுதியாக கூறுகிறார்கள். இதனால் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால், எம்.எல்.ஏ.க்களுக்கு குதிரை பேரம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டு, நிலையற்ற தன்மை ஏற்படும். அத்தகைய நிலை மீண்டும் அமைந்துவிடுமோ என்று காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் அஞ்சுகிறார்கள்.

    இதுகுறித்து ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, 'தொங்கு சட்டசபை ஏற்படும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பார்க்கும்போது தெரிகிறது. ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைய உறுதியான வாய்ப்பு உள்ளன. முதலில் தேர்தல் முடிவு வரட்டும். அதன் பிறகு எந்த கட்சிக்கு எந்த மாதிரியான முக்கியத்துவம் கிடைக்க போகிறது என்பது தெரியவரும்' என்றார்.

    காங்கிரஸ் தலைவர்கள் நேற்று சித்தராமையாவின் வீட்டில் கூடி தீவிரமாக ஆலோசனை நடத்தினர். இதில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பி.கே.ஹரிபிரசாத், தினேஷ் குண்டுராவ், சதீஸ் ஜார்கிகோளி, எச்.கே.பட்டீல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள், ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால் என்ன செய்வது, ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைப்பதா? என்பது போன்ற விஷயங்கள் குறித்து ஆழமாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    மேலும் காங்கிரஸ் சார்பில் போட்டியில் உள்ள 224 தொகுதிகளின் வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்திய தலைவர்கள், தேர்தல் முடிவுக்கு பிறகு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து அறிவுறுத்தினர். ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால் குதிரை பேரத்தில் சிக்குவதை தடுக்க கட்சியின் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று பெங்களூருவில் இருந்தபடி, ஜனதா தளம் (எஸ்) கட்சியின் வேட்பாளர்களுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, தொங்கு சட்டசபை அமைந்தால், குதிரை பேரம் நடத்த கட்சிகள் முயற்சி செய்யும் என்றும், அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், வெற்றி பெற்றவுடன் கட்சி தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    இந்த தேர்தலில் எப்படியும் பா.ஜனதா பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகிறார்கள். அவர்கள் தேர்தல் முடிவு எப்படி வருகிறது என்பதை அறிந்தே கூடி ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நாளை 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • ஒவ்வொரு மையத்திலும் 10 முதல் 14 மேஜைகள் அமைக்கப்படும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மேஜைகள் ஒதுக்கப்படும்.

    பெங்களூரு:

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 209 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 133 தொகுதிகளிலும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சுயேச்சையாக 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

    தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 37 ஆயிரம் இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.

    இந்த தேர்தலில் 72.67 சதவீத வாக்குகள் பதிவாயின. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தற்போது 0.31 சதவீதம் அதிக வாக்குகள் பதிவாகி இருக்கிறது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(13-ந் தேதி) நடக்கிறது .

    வாக்கு எண்ணிக்கை பணியில் ஊழியர்கள் 3 பிரிவாக ஈடுபடுவார்கள். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண் பார்வையாளர், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், உதவியாளர் இருப்பார். ஒவ்வொரு மையத்திலும் 10 முதல் 14 மேஜைகள் அமைக்கப்படும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மேஜைகள் ஒதுக்கப்படும்.

    வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நாளை 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கபப்பட்டு உள்ளன. இந்த மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன.

    பெங்களூருவில் 28 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 4 மையங்களில் நடக்கிறது.

    தேர்தல் முடிவுகளை ஆன்லைனில் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான eci.gov.in-ல் உடனுக்குடன் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த இணைய தளத்தில் ஏப்ரல் 2023 சட்டமன்றத் தொகுதிக்கான பொதுத் தேர்தல்' என்பதைக் கிளிக் செய்தால் முடிவுகள் தெரியும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1983-ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்தது. 1983-ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதல்முறையாக ஜனதா தளம் கடசி ஆட்சியை பிடித்தது. 1978 வரை நடந்த 6 சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வென்று ஆட்சியமைத்தது.

    ஆனால் 1983-ல் வென்ற ஜனதாதளம்,1985-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வென்று ஆட்சியமைத்தது. அதன்பிறகு 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.1994-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் ஜனதா தளம் வென்று ஆட்சியமைத்தது.

    1999-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியமைத்தது. ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி ஆட்சியமைத்த நிலையில், 2004-ம் ஆண்டு முதல் முறையாக ஜே.டி.எஸ்., பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்தது.

    2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வென்று கர்நாடகாவில் முழுமையாக ஆட்சி பொறுப்பேற்றது. 2013-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியமைத்தது. 2018-ல் பா.ஜ.க., காங்கிரஸ், இரு கட்சிகளுக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் பா.ஜ.க. 104 இடங்களில் வென்றும் ஆட்சியமைக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சி தடலாடியாக ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஆதரவு அளித்ததால் குமரசாமி முதல்வராக பதவியேற்றார். ஆனால் ஆட்சி ஒரு வருடம் கூட நீடிக்கவிலலை.

    காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். கட்சியில் இருந்து சில அதிருபதி எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ததால், பா.ஜ.க.விற்கு மெஜாரிட்டி கிடைத்தது, அத்துடன் அங்கு நடந்த இடைத்தேர்தலிலும் பா.ஜ.க. வென்றதால் ஆட்சியை பா.ஜ.க. தக்கவைத்தது. முதலில் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவியேற்றார். அதன்பிறகு பசவராஜ் பொம்மை அங்கு முதல்-மந்திரி ஆனார்.

    இதுவரை 15 முறை நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் பெரும் காங்கிரஸ் கட்சியே வென்று ஆட்சியமைத்துள்ளது. ஆனால் கடைசி 30 ஆண்டுகளில் இரு கட்சிகளும் மாறி மாறித்தான் ஆட்சி செய்து வருகின்றன. இந்தமுறை 16-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் முனைப்பில் பா.ஜ.க.வும், எப்படியாவது வெல்ல வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் கடும் போட்டியில் இருக்கிறன.

    இவர்களில் யார் ஆட்சியமைப்பது என்பதை தீர்மானிக்கும் கட்சியாக குமாரசாமியின் ஜே.டி.எஸ் கட்சியும் இருக்கிறது. என்றாலும் கர்நாடகா மக்கள் யாரை ஆட்சியில் அமர வைக்க போகிறார்கள் என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும்.

    • நமது எதிர்காலத்தை நாமே எழுதும் நாள்.
    • இளம் வாக்காளர்கள் அறிவாளிகள்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று ராம்நகர் மாவட்டம் கனகபுராவில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எல்லா வாக்குச்சாவடிகள் அருகேயும் சமையல் கியாஸ் சிலிண்டரை வைத்து பூஜை செய்யுமாறு தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்ற நாங்கள் 5 முக்கியமான வாக்குறுதிகளை அளித்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் இந்த 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற உள்ளோம்.

    இன்று (நேற்று) கர்நாடகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நாள். நமது எதிர்காலத்தை நாமே எழுதும் நாள். காங்கிரசின் வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் அளிக்கும் நாள். புதிய வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஆர்வம் இருக்கும். மாநிலத்தில் இளம் வாக்காளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கர்நாடகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

    கர்நாடகத்தில் பா.ஜனதாவின் தவறான ஆட்சி நிர்வாகத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். இளம் வாக்காளர்கள் அறிவாளிகள். அவர்கள் இந்த பா.ஜனதா ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவார்கள். இளைஞர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை ராஜீவ்காந்தி தான் வழங்கினார். அதனால் இளம் வாக்காளர்கள் ஜனநாயகத்தை காக்க வேண்டும். கனகபுரா தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது வருகிற 13-ந் தேதி தெரியவரும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
    • மொத்தம் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    கடந்த மாதம் 13-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 20-ந் தேதி முடிந்தது. இங்கு 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இதில் ஆண் வேட்பாளர்கள் 2 ஆயிரத்து 430 பேரும், பெண் வேட்பாளர்கள் 184 பேரும் உள்ளனர். ஒரே ஒரு திருநங்கை வேட்பாளர் மட்டும் களத்தில் உள்ளார்.

    ஆளும் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 209 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 133 தொகுதிகளிலும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 8 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. சுயேச்சையாக 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்காவி தொகுதியிலும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வருணாவிலும், முன்னாள் முதல்-மந்திரிகள் குமாரசாமி சென்னப்பட்டணாவிலும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

    இந்த தேர்தலில் வாக்களிக்க 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 பேர் தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும் உள்ளனர். 3-ம் பாலின வாக்காளர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் அடங்குவர். இந்த வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 37 ஆயிரம் இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்குச்சாவடிகளில் இளம் வாக்காளர்கள், பெண்கள், இனக்குழுக்கள் போன்றோருக்கு சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இனக்குழுக்கள் வாக்குச்சாவடியில் பணியாற்றிய தேர்தல் அலுவலர்கள், அந்த சமூகத்தின் கலாசார உடைகளை அணிந்து வந்திருந்தனர். இது வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.

    பெண்களுக்கான 'சகி' வாக்குச்சாவடிகள் மாநிலம் முழுவதும் மொத்தம் 996 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் முழுக்க, முழுக்க பெண் தேர்தல் அலுவலர்கள் பணியாற்றினர். மாநிலம் முழுவதும் 239 வாக்குச்சாவடிகள் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் ரோஜாப்பூக்கள் கொடுக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதுபோல் மாநிலம் முழுவதும் மொத்தம் 239 வாக்குச்சாவடிகள் இளம் வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டு இருந்தது. அந்த வாக்குச்சாவடிகளில் இளம் வாக்காளர்களை கவரும் வகையில் முழுக்க, முழுக்க இளம் தேர்தல் அலுவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்.

    திட்டமிட்டப்படி ஓட்டுப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணி முதலே பொதுமக்கள் வாக்குச்சாவடிகளை நோக்கி வந்தனர்.

    இதனால் காலை 7.30 மணிக்கெல்லாம் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். விறுவிறுப்பான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்துவிட்டு சென்றனர். இந்த முறை வாக்காளர்களின் முகத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்களிப்பதில் ஒரு விதமான ஆர்வம் காணப்பட்டது. பெங்களூரு சிவாஜிநகர், பேகூர், தொட்ட நாகமங்களா, மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, ஸ்ரீராமபுரா, யஷ்வந்புரம் போன்ற பகுதிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர்.

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்காவியில் உள்ள அரசு கன்னட உயர் மாதிரி தொடக்கப்பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்துவிட்டு சென்றார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலபுரகியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    92 வயதாகும் முன்னாள் பிரதமர் தேவகவுடா தனது வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது குடும்பத்தினருடன் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புராவில் வாக்களித்தார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது மனைவி அனிதா குமாரசாமி, மகன் நிகில் குமாரசாமி, மருமகள் ரேவதி ஆகியோருடன் வந்து பிடதி கேதகானஹள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். நடிகர்கள் கணேஷ், சுதீப், உபேந்திரா, யுவ ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார், துருவ் சர்ஜா, யஷ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாக்களித்தனர்.

    பெங்களூரு பத்மநாபநகரில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலை 12 மணியளவில் 30 பேர் கொண்ட கும்பல் உருட்டு கட்டைகளுடன் வந்தது. அங்கு இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த கும்பலை விரட்டியடித்தனர்.

    இதைத்தவிர பெங்களூரு மாநகரில் ஓட்டுப்பதிவு எந்த விதமான வன்முறையும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறிய அளவில் வன்முறைகள், வாக்குவாதங்கள், தள்ளுமுள்ளுகள் நடைபெற்றன. பெரும்பாலும் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது. விஜயாப்புரா மாவட்டம் மசபிநாலா கிராமத்தில் ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வட்ட அதிகாரி காரில் கூடுதல் மின்னணு வாக்கு எந்திரங்களுடன் வந்தார்.

    இதை பார்த்த கிராம மக்கள், தேர்தலில் ஏதோ முறைகேடு செய்ய வந்திருப்பதாக கருதி சந்தேகம் அடைந்து அந்த காரை தடுத்து நிறுத்தினர். அதில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்கு எந்திரங்களை வெளியே எடுத்து நடுரோட்டில் போட்டு அடித்து உடைத்து நொறுக்கினர். இதில் அந்த எந்திரங்கள் துண்டு, துண்டாக உடைந்து நொறுங்கியது. மேலும் அந்த காரையும் குண்டுக்கட்டாக தூக்கி கவிழ்த்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆனந்த்குமார், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அங்கு போலீஸ் படையும் விரைந்து வந்தது. வன்முறையில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் படை அங்கு வந்த பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. மொத்தம் 2 மின்னணு வாக்கு எந்திரங்கள், 2 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 3 வி.வி.பேட் எந்திரங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்தன. அதே நேரத்தில் அங்கு அந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. அதில் எந்த தடையும் ஏற்படவில்லை.

    கோலார் மாவட்டம் குமனி கிராமத்தில் காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரின் மண்டை உடைந்தது. சித்தராமையா போட்டியிடும் வருணாவுக்கு பா.ஜனதா வேட்பாளர் சோமண்ணா வந்தார். அவர் வாக்குச்சாவடி ஒன்றில் ஆய்வு செய்தார். அப்போது, பா.ஜனதா, காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    கா்நாடகத்தில் மிக அதிக வாக்காளர்களை கொண்ட பெங்களூரு தெற்கு தொகுதிக்கு உட்பட்ட தொட்ட நாகமங்களாவில் 8 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரே ஒரு வாக்குச்சாவடி மட்டுமே அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் அங்கு வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வாக்காளர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து வாக்களித்து சென்றனர். இதனால் அவா்கள், தேர்தல் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

    பெலகாவி மாவட்டம் கித்தூரில் 9 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு திடீரென நிறுத்தப்பட்டது. அங்கு மின்னணு வாக்கு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து வாக்குப்பதிவு பாதியில் நின்றது. இதனால் அங்கு வாக்காளர்கள் 2 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்தனர். இதன் காரணமாக வாக்காளர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.

    காலை 9 மணி நிலவரப்படி ஓட்டுப்பதிவு 8.26 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதமும், மதியம் 1 மணி நிலவரப்படி 37.25 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 52.18 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கொன்றும், இங்கொன்றுமான சம்பவங்களை தவிர்த்து, மற்ற இடங்களில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மொத்தம் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்த தேர்தலில் சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாயின. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் பா.ஜனதா 104 இடங்களையும், காங்கிரஸ் 80 தொகுதிகளையும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 37 இடங்களையும் கைப்பற்றின. அப்போது எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(13-ந் தேதி) நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×